-ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றில் கேள்வி-
இலங்கையை கட்டியெழுப்பும் நிதியம் ஒன்று ஜனாதிபத செயலகத்தால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சர்வதேசத்திற்கு கூறப்படுகிறது. அவ்வாறான ஒன்று இல்லை என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹர் ஷ டி சில்வா, சட்டத்தால் ஸ்தாபிக்கப்பட்ட நிதியம் இருந்தால் ஆவணங்களை சபைக்கு சமர்ப்பியுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற டித்வா புயலின் பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
டித்வா தாக்கத்தின் பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி செயலகத்தால் நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உண்டு. ஆகவே நிதி தொடர்பான நிதியங்கள் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் தான் ஸ்தாபிக்கப்பட வேண்டும். ஆகவே இந்த நிதியத்தை சட்டத்தால் நியமியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த கால முறைகேடுகள் பற்றி பேசப்படுகிறது. எதிர்காலத்தில் அவ்வாறான முறைகேடுகள் இடம்பெறாத வகையில் செயறப்படுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். இலங்கையை கட்டியெழுப்பும் நிதியம் ஒன்று ஜனாதிபதி செயலகத்தால் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ஆனால் அவ்வாறான நிதியம் ஏதும் நியமிக்கப்படவில்லை என்று நான் குறிப்பிட்டுக் கொள்கிறேன். சட்டத்தால் அவ்வாறான நிதியம் ஏதும் நியமிக்கப்பட்டிருந்தால் அதற்கான ஆவணங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பியுங்கள் என்று ஆளும் தரப்பிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நிதியத்துக்கு கிடைக்கும் நிதி தனிநபரின் சட்டைப்பைக்குள் செல்கிறது என்று நாங்கள் குறிப்பிடவில்லை. நாட்டில் கணக்காய்வாளர் நாயகம் தற்போது இல்லை ஆகவே அரச நிதி தொடர்பான குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் இதனை குறிப்பிடுகிறேன் என்றார்.


















