-கம்மன்பில கண்டுபிடிப்பு-
இலங்கை வரலாற்றில் மிகமோசமான அரச தலைவராகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க காணப்படுகிறார் என கூறியுள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, 2026 ஜனவரி 2ம் திகதிக்கு பின் தனது பல்கலைகழக நண்பனை அல்லது ஜே.வி.பி சகோதரர்களை ஜனாதிபதி கணக்காய்வாளர் நாயமாக நியமிப்பார் எனவும் கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, கணக் காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடமாகி 08 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் சிறந்த ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்குமாறு 22 சிவில் அமைப்புகள், கூட்டாக வலியுறுத்தியிருந்தனர். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி கணக்காய்வாளர் நாயகத்தை நியமித்திருந்தால் எவ்வித நெருக்கடியும் ஏற்பட்டிருக்காது. இருப்பினும் தற்போது காலம் கடந்துள்ளது. அரசியலமைப்பு பேரவையின் மூன்று சிவில் பிரஜைகளின் பதவி காலம் எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
தனது முகவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அதற்காகவே இந்த நியமனத்தை இழுத்தடிப்புச் செய்கிறார் என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டோம். தேசிய மக்கள் சக்தி சுயாதின திணைக்களங்கள் மற்றும் ஆணைக்குழுக்களுக்கு களனி பல்கலைக்கழக நண்பர்களை நியமிக்கிறது அல்லது மக்கள் விடுதலை முன்னணியின் சகோதரர்களை நியமிக்கும்.
களனி பல்கலைக்கழக நண்பனை அல்லது மக்கள் விடுதலை முன்னணியின் சகோதர்களை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைகளை இந்த சிவில் பிரஜைகள் மூவர் தான் எதிர்த்தார்கள். இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக ரங்க திஸாநாயக்க முறையற்ற வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்த மூவரும் தான் உயர்நீதிமன்றத்துக்கு சத்திய கடதாசி ஊடாக அறிவித்துள்ளார்கள்.
இலங்கை அரசியல் வரலாற்றில் தோற்றம் பெற்ற மிக மோசடியான அரச தலைவராகவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க காணப்படுகிறார். தனக்கு இணக்கமானவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமித்தால் எவ்வாறு சுயாதீனமான கணக்காய்வுகள் முன்னெடுக்கப்படும்.
ஜனாதிபதியின் இந்த முறையற்ற செயற்பாட்டை தோற்கடிப்பதற்கு அரசியலமைப்பு பேரவையின் சிவில் பிரஜைகள் இதுவரை காலமும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு முழு நாடும் அவர்களுக்கு கௌரவமளிக்க வேண்டும் என்றார்.


















