-நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி-
ஈரான் மற்றும் இலங்கைக்கிடையில் நிலவிவரும் நீண்டகால நட்புறவை எதிர்வரும் காலங்களில் மேலும் வலுப்படுத்துவதற்குத் தேவையான விடயங்கள் முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஈரானின் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஈரானின் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வு கொழும்பு ஐ.டி.சி ரத்னதீபா ஹோட்டலில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில், ஈரானின் தேசிய தினம் கொண்டாடப்படும் இந்நாளில், ஈரான் அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்துக்காக இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும், இந்நாட்டு மக்களின் சார்பிலும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இலங்கை – ஈரானுக்கிடையில் மிக நீண்டகாலமாகச் சிறந்ததொரு நட்புறவு நிலவிவருகிறது. இலங்கையுடன் நீண்டகாலமாக இராஜதந்திர ரீதியிலான நட்புறவைப் பாராட்டிவரும் ஈரான் சுனாமி, கொவிட்-19 மற்றும் டிட்வா சூறாவளி போன்ற அனர்த்த நிலைமைகளின் போது எமக்கு ஆதரவாக இருந்தது.
அத்தோடு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் வணிகம், தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளின் மேம்பாட்டுக்கான திட்டங்களிலும் ஈரான் தனது ஒப்பற்ற பங்கினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















