இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் 93 வது தலைவராக வைத்திய கலாநிதி ஆனந்த ரத்நாயக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் கொழும்பு கோட்டேயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 2025-2026 ஆம் ஆண்டுக்கான 93வது தலைவராக ஆனந்த ரத்நாயக்க நியமிக்கப்பட்டார். இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் தற்போதைய தலைவர் பேராசிரியர் ருவன் ஜெயசிங்க புதிய தலைவருக்கு சிறப்பு ஆடையை வழங்கினார். இந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ,
நாட்டின் நீண்ட வரலாற்றை கொண்டசங்கமான இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் 93வது தலைவரைப் பதவியேற்கும் விழாவில் பங்கேற்பது மிகுந்த மரியாதைக்குரியது என்று கூறினார்.
புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் ஆனந்த ரத்நாயக்கவுக்கும் அவர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ஒன்பது தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டில் பல் மருத்துவத்தை மேம்படுத்துவதற்கு இலங்கை பல் மருத்துவ சங்கம் பெரும் பங்களிப்பைச் செய்து வருவதை அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இலங்கை சுகாதாரத் துறையின் பல துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் வயதுவந்தவர்கள் பல் நோய்களால் பாதிக்கப்படுவது அடையாளம் காணப்பட்டாலும், இந்த நிலைமைகளிலிருந்து இந்த நாட்டின் குழந்தைகள் மற்றும் மக்களைப் பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் சுகாதார கல்வித் திட்டங்களை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தப் பணியில் இலங்கை பல் மருத்துவ சங்கம் பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக முன்கூட்டியே நோயைக் கண்டு அறியும் அவசியத்தைச் சுட்டிக் காட்டிய அமைச்சர், நாட்டில் ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் ஒரு பிரச்சனை என்றும் கூறினார்.
நாட்டில் உயர்தர சுகாதார சேவை செயல்பட்டு வருவதை தெரிவித்த அமைச்சர், நாட்டில் தற்போதைய பல் சம்பந்தமான மருத்துவத்தை அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மேலும் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். நாட்டு மக்களை நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பெற்றுக்கொள்ளும் மக்களாக மாற்ற சுகாதார அமைச்சகம், நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் மேலும் கூறினார். இலங்கை பல் மருத்துவ சங்கம், சுமார் 1,900 உறுப்பினர்களைக் கொண்டது, இது இலங்கையில் பல் மருத்துவத் தொழிலின் தேசிய அமைப்பாகும், மேலும் அதன் பிரதான செயல்பாடுகள் வாய் சம்பந்தமான நோய்களைத் தடுப்பது, நாட்டில் பல் பராமரிப்பு சேவைகளை தரப்படுத்துவது, பல் மருத்துவத் துறையில் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவது மற்றும் அதன் உறுப்பினர்களின் தொழில்முறை வளர்ச்சியை மேம்படுத்துவதாகும் என்றார்.


















