இலங்கை இராணுவத்திற்கும், ரஷ்ய இராணுவத்திற்கும் இடையே மதுரு ஓயா பயிற்சி முகாமில் தற்போது நடைபெற்று வரும் கூட்டுப் பயிற்சியின் போது, கையெறிகுண்டு (Hand Grenade) வெடித்ததில் மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை மதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த இராணுவ வீரர்கள் உடனடியாகப் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் இராணுவ வீரர்களுக்கு கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும், சிகிச்சைக்குப் பிறகு அவர்களின் நிலை சீராக உள்ளது என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்த விபத்து, இலங்கை இராணுவமும், ரஷ்ய இராணுவமும் இணைந்து தற்போது நடத்தும் கூட்டு இராணுவப் பயிற்சியின் போது நிகழ்ந்துள்ளது


















