இலத்திரனியல் விசா முறைமை தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
இலத்திரனியல் விசா முறைமை மோசடி பற்றி எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரம் உயர்நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள ஒரு விடயம் தொடர்பில் எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இலத்திரனியல் விசா முறைமை விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஊழல் மோசடியாளர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு கிடையாது என்றார்.


















