‘உருமய’ தேசிய திட்டத்தின் கீழ் இலவசப் பத்திரங்களை வழங்குவதாகக் கூறி சுமார் 100 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2024 ஆம் ஆண்டில் 164 வணிக உரிமையாளர்களை நிதி மோசடி செய்ததற்காக இந்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பக்கமுன பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் ஆகஸ்ட் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதேவேளை மகரகமவைச் சேர்ந்த ஆண் செப்டம்பர் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பெண் கல்முனையில் ‘உருமய’ இலவசப் பத்திரத் திட்டத்தின் கீழ் பத்திரங்களை வழங்குவதாகக் கூறி 164 பேரை ஏமாற்றியும் பின்னர் ஒரு வழக்கறிஞராக நடித்து ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ. 600,000 பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சந்தேக நபரான பெண் கல்முனையைச் சேர்ந்த சுமார் 50 தொழிலதிபர்களை அரசியல் பற்றி விவாதிக்க சிறிகொத்தா தலைமையகம் மற்றும் கொழும்பில் உள்ள முக்கிய விடுதிகளுக்கு வரவழைத்து, இலவசப் பத்திரங்களை வழங்குவதாகக் கூறி அவர்களையும் ஏமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு நிதி மோசடி மூலம் சம்பாதித்த பணத்தை பொலிஸார் கைப்பற்றுவதற்கான சட்ட நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


















