பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டுமென இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் இரண்டு உயர் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைப் போலவே, இஷாரா செவ்வந்தி கைது விடயத்தையும் அரசாங்கம் அரசியலாக்கக் கூடாது.
இந்தப் பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை நாடு அறிந்து கொள்ள வேண்டும். இது குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தேடப்பட்டு வந்த பல நபர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 17 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக துணை அமைச்சரே தெரிவித்துள்ளார்.
எனினும், அந்தக் கடவுச்சீட்டுகள் யாருடையவை என்பதை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. துறைமுகத்திலிருந்து ஆய்வு செய்யப்படாத 323 கொள்கலன்களை விடுவித்தவர்கள் யார்? என்ற விவரங்களை வெளியிடவில்லை.
தயவுசெய்து இந்தச் சம்பவங்களையும் விசாரிக்க வேண்டும். அரசாங்கம் இந்த விடயங்களை விசாரித்து பாதாள உலக நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


















