-சொ.வர்ணன்-
பாடசாலை நேரம் முடிவதற்குள் பஸ் வந்துவிடுவதால் முழுமையான பாடவேளையை நடத்த முடியாமல் உள்ளதாக வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய அதிபர் கவலை தெரிவித்தார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற இ.போ.ச ஆணையாளர் பங்குபற்றிய போக்குவரத்துத்துறை தொடர்பான கலந்துரையாடலிலேயே மேற்படி விடயத்தை அதிபர் தெரிவித்தார்.
அவர் அங்கு தெரிவிக்கையில் எமது பகுதி கஷ;டப் பிரதேசமாக காணப்படுவதுடன் பாடசாலைகளுக்கு வரும் மாணவர்கள் பல்வேறு பிரச்சனைகளுடன் வருகின்றனர்.
அவ்வாறு வருகைதரும் மாணவர்கள் தமது கல்வியை கற்றபின் பேருந்துகளை பயன்படுத்தி வீடுகளுக்கு திரும்பும் நிலையில், பாடசாலை முடிவடைவதற்கு முன்பதாகவே, இ.போ.ச பேருந்து வந்துவிடுவதால் மாணவர்கள் வீடு செல்ல துடிக்கிறார்கள். இதனால் ஒரு பாடவேளையை முழுமையாக முடிக்க முடியாமல் 20 நிமிடங்களுக்கு முன்பே பாடசாலையை மூடவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இந்த விடயத்தை கருத்தில் கொண்டு இ.போ.ச பேருந்தை உரிய நேரத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















