-விமல் வீரவன்ச கண்டுபிடிப்பு-
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் இருந்த ஈரான் கடற்படை கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் விடயத்தை இந்தியாவின் ரோ உளவு அமைப்பு முன்கூட்டியே அறிந்தும், விருந்தோம்பலுக்காக வந்திருந்த ஈரானியர்களை இந்தியா காட்டிக் கொடுத்துள்ளதாக விமல் வீரவன்ச கூறினார்.
பத்தரமுல்ல பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அமெரிக்கா – இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்துவதும், ஈரான் மத்திய கிழக்கு நாடுகளுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தாக்குல் நடத்துவதும் தற்போது தீவிரமடைந்துள்ளது. யுத்தம் நாளுக்கு நாள் தீவிரமடைந்த நிலையில் காணப்படுகின்ற பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபை ஏதும் நடக்காததைபோன்று அமைதியாக இருக்கிறது.
இந்தியா, ஈரானை விருந்தோம்பலுக்கு அழைத்து காட்டிக் கொடுத்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும். இந்தியாவில் விசாகப்பட்டினம் பகுதியில் இடம்பெற்ற சர்வதேச கடற்படை கண்காட்சியில் கலந்துகொண்டு தமது நாட்டுக்கு திரும்பும்போது தான் ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இது பல மாத திட்டமிடலின் வெளிப்பாடாகும். இந்தக் கண்காட்சியில் கலந்துகொள்ளுமாறு இந்தியா ஈரானுக்கு அழைப்பு விடுத்தது. நெருக்கடியான சந்தர்ப்பத்தில் இந்தியா விடுத்த அழைப்பை ஈரான் மறுக்காமல் மரியாதை வழங்கி இந்தியாவுக்கு தமது கடற்படைக் கப்பல்களை அனுப்பிவைத்தது.
அமெரிக்காவுக்கும் இந்தியா அழைப்பு விடுத்தது. இருப்பினும் இறுதித் தருணத்தில் அமெரிக்கா அந்த அழைப்பை நிராகரித்தது. இந்து சமுத்திரத்தில் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஈரான் கப்பல் தாக்கப்பட்டமை தொடர்பில் இந்திய முன்னாள் வெளிவிவகார செயலாளர் கன்வால் சிபல் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் ஈரான் கப்பல் விவகாரத்தில் இந்தியாவுக்கு தார்மீக பொறுப்பும், மனிதாபிமான கடப்பாடும் உண்டு என்று குறிப்பிட்டு, இந்தத் தாக்குதல் பற்றி இந்தியாவின் ரோ உளவுப்பிரிவு முன்கூட்டியதாக அறிந்திருக்கவில்லையா என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்து சமுத்திரத்தில் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஈரான் கப்பல் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டிருந்ததை இந்தியாவின் ரோ உளவுப்பிரிவு முன்கூட்டியதாகவே அறிந்துக் கொண்டது.
ஆனால் நமது நாட்டுக்கு வந்தவர்களை பாதுகாக்காமல், தாக்குதல் நடத்துவதற்கு உளவு பார்த்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான ஈரானிய கப்பல் முதலில் இந்தியாவிடம் தான் தஞ்சம் கோரியது. இந்தியா அனுமதி வழங்காததன் பின்னர் தான் இலங்கையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் இந்தியாவின் செயற்பாடு அதிருப்திக்குரியது. இந்தியாவின் செயற்பாட்டை உலக நாடுகள் வன்மையாக விமர்சித்ததன் பின்னர் ஈரானின் 3 ஆவது கப்பலுக்கு இந்தியா தற்போது அனுமதி வழங்கியுள்ளது என்றார்.


















