-கடலில் மிதந்த சடலங்களாலேயே சம்பவம் தெரியவந்தது-
இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் இருந்த ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:-
அமெரிக்க பாதுகாப்புத் தரப்பினரால் இந்தத் தாக்குதல் குறித்து இலங்கைக்கு எவ்விதமான முன்னெச்சரிக்கையோ அல்லது தகவலோ வழங்கப்படவில்லை. பொதுவாக இரு நாடுகளுக்கு இடையே போர் நிலவும் போது, ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதை மூன்றாம் தரப்பு நாடு ஒன்றுக்கு முன்கூட்டியே அறிவிப்பார்கள் என்று தாம் கருதவில்லை.
கடற்படைக்கு இந்தத் தகவல் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து தமக்குத் துல்லியமாகத் தெரியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், அந்தப் பகுதியில் சில சடலங்கள் மற்றும் உயிர் காக்கும் அங்கிகள் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே எமது கடல்சார் மீட்பு நிலையத்திற்கு செய்தி கிடைத்தது.
எனினும், இத் தாக்குதல் குறித்த உத்தியோகபூர்வ செய்தி எங்கிருந்து வந்தது என்பதை தம்மால் உறுதிப்படக் கூற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


















