உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை செய்தது யார், அரசியல் பிரதான சூத்திரதாரி யார்? என்பதையும் மக்கள் அறிவார்கள். அது ராஜபக்ஷர்கள் என்பதையும் அறிவார்கள் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசர கால சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும். உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் சொல்வதற்கு முரணாக செயற்படுகிறார்கள்.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் காட்டு நீதிமன்றத்தில் இடம்பெறுகிறது.
அமைச்சரின் பங்களாவில் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது, விசாரணைகள் தினசரி இடம்பெறுவதால் சாட்சியாளர்களுக்கும், சட்டத்தரணிகளுக்கும் முன்னிலையாகுவதற்கு கடினமாக உள்ளது, அதேபோல் பிரதான சூத்திரதாரி இல்லாமல் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடுகிறார்கள்.
ஏதேனும் வழக்குத் தொடர்பில் நாளாந்தம் விசாரணைகளை முன்னெடுப்பதில் தவறேதும் உள்ளதா என்பதை நீதியமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும்.
குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் படுகொலையாளிகளின் நிலைப்பாட்டையே எதிர்க்கட்சி தற்போது கொண்டுள்ளது. வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது. குண்டுத்தாக்குதலை செய்தது. யார், அரசியல் பிரதான சூத்திரதாரி யார் என்பதையும் அறிவார்கள். அது ராஜபக்ஷர்கள் என்பதையும் அறிவார்கள் என்றார்.


















