-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ-
பொருட்களுக்கான உத்தரவாத விலைகள், உரமானியம் இரண்டையும் அரசாங்கம் வழங்கத் தவறிவிட்டது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான உத்தரவாத விலைகளை எதிர்பார்த்த போதிலும் கடந்த காலத்தைப் போலவே இந்த அரசாங்கத்தாலும் அவற்றை வழங்க முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார்.
வெங்காயம், பெரிய வெங்காயம், உருளைக் கிழங்கு, வட்டக்காய், நெல் உள்ளிட்ட பல உற்பத்திகளுக்கு அரசாங்கத்தால் உத்தரவாத விலைகளைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. உரமானியமும் உரிய நேரத்தில் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை.
தற்போது பெரும்போகச் செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் உரமானியம் கிடைக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இந்தச் சமயத்திலேயே உரமானியத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.


















