நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப் புலமைப்பரிசில் திட்டமானது நாட்டின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும் ஒரு மைல்கல்லாகும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு, உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இளமானிப் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இச்செயற்திட்டத்திற்காக 4,001 மில்லியன் ரூபாய் முதலீடு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. 2025 முதல் 2033 வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 200 மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, 2025/26 கல்வியாண்டிற்காக 32 மாணவர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 9 மாணவர்கள் அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன், மொனாஷ் மற்றும் நியூசிலாந்தின் ஓக்லண்ட் போன்ற உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே இணைந்துள்ளனர்.
மாணவர்கள் உலகத் தரவரிசையில் முதல் 500 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்களிலேயே பயில வேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாகும்.
தெரிவு செய்யப்படும் ஒரு மாணவருக்காக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 20 மில்லியன் ரூபாய் வீதம், நான்கு வருட முழுமையான பட்டப்படிப்புக் காலத்திற்காக 80 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.



















