இந்த வருடம் பிற்போடப்பட்ட கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான எஞ்சிய பாடங்களுக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது வதிவிடங்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமது பாடசாலை அதிபர் அல்லது பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்தார்.
அனர்த்த நிலைமைகளால் இடம்பெயர்ந்து ஏற்கனவே பரீட்சைக்கு தோற்றிய பாடசாலையில் மீண்டும் தோற்ற முடியாத நிலைமை காணப்படும் பரீட்சார்த்திகள் உரிய காலத்திற்குள் அது குறித்து அறிவித்தால் வேறு பரீட்சை மத்திய நிலையங்களில் தோற்றுவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் .
0112 784 537 மற்றும் 0112 788 616 என்ற எண்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி பரீட்சை திணைக்களத்திற்கு இது தொடர்பில் அறிவிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் அல்லது தேசிய அடையாள அட்டைகள் அனர்த்தம் காரணமாக அழிவடைந்திருந்தால் அவர்கள் உடனடியாக அது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அதனை பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
அடையாள அட்டைகள் காணாமல் போயிருந்தால் அல்லது அழிவடைந்திருந்தால் தபால் அடையாள அட்டைக்கான அளவில் எடுக்கப்பட்ட 2 படங்களை உறுதிப்படுத்தி, அடையாள அட்டைக்கு பதிலாக சமர்ப்பிக்க முடியும் எனவும்
பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரின் மூலம் இதனை உறுதிப்படுத்த முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.


















