பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே 72 மணிநேரம் தடுத்துவைத்து விசாரிக்கப்படவுள்ளார்.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான மீள் விசாரணைகளின் ஒரு கட்டமாகவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நேற்று பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்பட்டன.
மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ;ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த கருத்துத் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகக் கிடைத்துள்ள வலுவான சாட்சியங்களின் அடிப்படையிலேயே சுரேஷ; சலே கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக நீண்டகால விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால், மேலதிக தகவல்களை இப்போதைக்கு வெளியிட முடியாது எனத் தெரிவித்தார்.
கைதுக்கான காரணத்தை உடனடியாக அறிவிக்காமல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டமைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சஜீவ மெதவத்த, அவரைக் கைது செய்யாமல் இருந்திருந்தால் தான் பொலிஸாருக்கு எதிராக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். பொலிஸார் தமது கடமையைச் சரியாகச் செய்துள்ளனர்.
சுரேஷ; சலேவிடம் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளின் ஊடாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் உள்ள மகா சூத்திரதாரி தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டனர்.


















