பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்றாவது சந்தேகநபராக பெயரிரிடப்பட்டுள்ளார். இந்த விடயத்தை குற்றப்புலனாய்வு பிரிவு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 2026 பிப்ரவரி 25 ஆம் திகதி சுரேஸ் சாலே கைது செய்யப்பட்டதாகவும், விசாரணைக்கு வழங்கப்பட்ட அனுமதியின் பிரகாரம் அவர் தற்போது 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருவதாகவும் நீதவான் இசுரு நெத்திகுமாரவிடம் சீ.ஐ.டி அறிவித்துள்ளது.
ஊடக அறிக்கைகளின்படி, சலேயை சந்தேக நபராகக் குறிப்பிடுவதற்கான ஆதாரங்கள் உள்ளதா என நீதவான் விசாரித்தார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தியது.
சந்தேகநபர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், அவரை கண்காணிக்க உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுத்துறை நீதிமன்றத்தை மேலும் கோரியது. இந்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் கிழக்கு மாகாண காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரும், மேலும் இருவரும் ஏற்கனவே சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் நடந்த சாய்ந்தமருது குண்டுவெடிப்பு தொடர்பான முக்கிய தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர். நடந்து வரும் விசாரணை தொடர்பான மேலும் ஒரு அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.


















