உலகின் மிக மாசடைந்த 10 சமுத்திர வலயங்களுக்குள் இலங்கையும் அடங்குகின்றது. இந்நிலையை மாற்றி, எமது அழகிய கடற்கரையையும், சமுத்திர வலயத்தையும் பாதுகாப்பதற்கு மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, அது சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.
தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்தை பலப்படுத்தும் நோக்கில், 85 புதிய அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வின் போது, இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாரா நிறுவனமானது வெறும் பாரம்பரிய ஆராய்ச்சிகளுடன் மட்டுப்படுத்தப்படாது, புத்தாக்கங்களை நோக்கிச் செல்ல வேண்டும்.
நாம் கடற்றொழில் துறையை பாரம்பரிய கட்டமைப்புக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டும். எண்ணெய் அகழ்வு, சமுத்திர கனியவள அகழ்வு மற்றும் கடல் உணவு சார்ந்த புதிய உற்பத்திகள் குறித்து நாரா நிறுவனம் கவனம் செலுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது.
நாம் தாமதிக்கவில்லை, இப்போது மலை உச்சி நோக்கிப் பறக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. என்பதை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் என்றார்.


















