தற்போதைய அரசாங்கம் 72,000 பதிய நியமனங்களை அரச சேவைக்கு உள்வாங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதில் 7,000 பேர் சுகாதார சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு சமூக சுகாதார மருத்துவ அதிகாரிகள் உட்பட 303 பட்டதாரிகளுக்கு புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டுகளில் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் பல்வேறு வழிகளில் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதால், அரச ஊழியர்களின் எண்ணிக்கை தேவையான எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கிறது.
தற்போதைய அரசாங்கம் அரச சேவைக்கான ஆட்சேர்ப்புக்கென ஒரு திட்டமிடலை தயாரித்துள்ளது. அதன்படி, மொத்தம் 72,000 புதியவர்களை அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதில் சுகாதார அமைச்சகம் மட்டும் சுமார் 9,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய ஒப்புதல் பெற்றுள்ளது. அவர்களில் கிட்டத்தட்ட 7,000 பேரை ஏற்கனவே ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.
கடந்த 6 மாதங்களில், 4,141 செவிலியர் அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் பொது சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 2018 ஆம் ஆண்டுக்குப் பின் உள்ளூர் ஆயுர்வேத மருத்துவ சேவைக்காக ஒரே நேரத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ அதிகாரிகள் நிகழ்வு இதுவாகும்.
நாட்டில் ஆயுர்வேத சேவையின் எதிர்கால செயல்திறனை மேம்படுத்துவதற்கும், வினைத்தினான நோயாளர்களுக்கான சேவையை வழங்குவதற்கும் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்த ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள ஆயுர்வேதத்திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
‘ஆரோக்கியமான நாட்டிற்காக’ என்ற கருப்பொருளின் கீழ் அந்த திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல நியமிக்கப்பட்ட அனைவரின் ஆதரவும் தேவை.
இந்த நியமனத்தை பெற்றுக்கொண்டவர்கள் நாட்டில் அமைந்துள்ள மத்திய அரசு ஆயுர்வேத மருத்துவமனைகள் மற்றும் மாகாண சபை ஆயுர்வேத மருத்துவமனைகளில் ஆயுர்வேத நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆயுர்வேத மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் ஒரு வருடத்திற்கு விரிவான பயிற்சியைப் பெற்றுள்ளனர்.
இந்த ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மருத்துவ அதிகாரிகள், மாகாண சபைகளின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கும், பல உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் நியமிக்கப்பட உள்ளனர்.
இலங்கையில் தொற்று மற்றும் தொற்றா நோய்கள் மற்றும் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், சிறுநீரக நோய்கள் பரவலாக உள்ள பகுதிகளை உள்ளடக்கி இந்த ஆயுர்வேத மருத்துவர்களின் சேவைகளை வழங்க ஆயுர்வேதத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.


















