வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஒன்று இவர் பதவி விலக வேண்டும். இல்லையேல், ஜனாதிபதி இவரை பதவி நீக்க வேண்டும்.
ஊழல் மோசடியாளர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு ஜனாதிபதியால் எவ்வாறு ஊழலுக்கு எதிராக செயற்பட முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வென்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
ஊழலுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமைச்சரவையில் ஊழல்வாதிகளை வைத்துக் கொண்டுள்ளார். அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் ஜனாதிபதி எடுக்கவில்லை.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுய கௌரவத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு வலுசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும். அல்லது ஜனாதிபதி அவரை பதவி நீக்க வேண்டும்.
ஊழல்வாதிகளை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு ஜனாதிபதியால் எவ்வாறு ஊழலுக்கு எதிராக செயற்பட முடியும்.கடந்த அரசாங்கங்கள் மற்றும் ஆட்சியாளர்கள் அனைவரும் ஊழல்வாதிகள், அரச நிதி மோசடியாளர்கள் என்று குற்றஞ்சாட்டியே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
அரச தலைவர் ஊழலுக்கு எதிராக செயற்பட்டாலும் அரசாங்கத்தில் உள்ள அனைவரும் அவ்வாறே இருப்பார்கள் என்று எண்ண முடியாது. ஆகவே ஊழல்வாதிகளை ஒருபோதும் அருகில் வைத்துக் கொள்ளப்போவதில்லை. பாரபட்சமின்றிய வகையில் நடவடிக்கை எடுப்பேன் என்று தேர்தல் பிரச்சார மேடைகளில் குறிப்பிட்டதை ஜனாதிபதி செயலில் காண்பிக்க வேண்டும் என்றார்.


















