தூய்மையான அரசியல் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்தவர்கள் நாளுக்கு நாள் ஊழல் – மோசடி சம்பவங்களில் சம்மந்தப்படுவதாக கூறியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நிரோஷன் பாதுக்க, ராஜபக்ஷ குழுவுக்கும் – அநுர குழுவுக்குமிடையில் வித்தியாசமே இல்லை எனவும் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டை ஆட்சிசெய்துவந்த அனைவரும் ஊழல் மோசடிகாரர்கள்.
தூய்மையான அரசியல் ஒன்றை கட்டியெழுப்ப அதிகாரத்தை வழங்குமாறு தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில் மக்கள் உணரும் வகையில் எதனையும் செய்யவில்லை. அதேநேரம் அரசாங்கத்தில் இருப்பவர்கள் நாளுக்கு நாள், ஊழல் மோசடி சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டு வருகிறார்கள்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கறுப்புப்; பட்டியலில் உள்ள நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரின் வங்கி கடன் அட்டையை பயன்படுத்தி இந்தியாவில் வைத்து ஒரு மில்லியனுக்கு பொருட்கள் கொள்வனவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு இல்லை என்றால் முடியுமானால் அவர் நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஊழல் மோசடி தொடர்பில் இவர்களுக்கும் ராஜபக்ஷ குழுக்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறதா என கேட்கிறோம்.
சுங்கத்தில் இருந்து கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது முதல் தற்போது தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதிவரை பாரியளவில் ஊழல் மோசடிகளும் இடம்பெற்று வருகின்றன. ஆனால் அவை அனைத்தையும் அரச அதிகாரிகளின் தலையில் கட்டிவிட்டு அரசாங்கம் தப்பிப் பிழைக்கிறது.
இந்நிலையில் தற்போது தித்வா அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு 20 இலட்சம் ரூபா வழங்குவதாக அளித்த வாக்குறுதியின் பிரகாரம் அநுராதபுரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 இலட்சம் ரூபா அடங்கி காசோலை ஜனாதிபதி கையளித்திருந்தார்.
ஆனால் அந்த காசோலைகளை பெற்றவர்கள் வங்கியில் கொடுத்தபோது, அந்த வங்கி கணக்குகளில் பணம் இல்லை. ஆனால் அநுராதபுரம் பிரதேச செயலாளர் இதனை நியாயப்படுத்தும் வகையில், காசோலை வழங்கப்பட்டவர்களின் காணியின் உண்மையான உரிமையாளர்கள் அவர்களா? மற்றும் இன்னும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடவில்லை. அதனால் காசோலைகளை வங்கியில் எனக் கூறி சமாளிக்கிறார். பிரதேச செயலாளரின் கூற்றின் பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரபூர்வமற்ற காசோலைகளையே வழங்கி இருக்கிறார். அனுபவம் இல்லாமையே இதற்கு காரணமாகும் என்றார்.


















