-உதய கம்மன்பில அரசுக்கு ஆலோசனை-
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட விலைச்சூத்திரத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பகிரங்கப்படுத்த வேண்டும். எரிபொருள் மீதான வரியை குறைத்தால் விலையை குறைக்கலாம் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்:-
எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு நாட்டு மக்கள் தான் காரணம், மத்திய கிழக்கில் யுத்தம் ஆரம்பமானவுடன் மக்கள் எரிபொருள் வரிசையில் நின்றார்கள், அதிகளவில் எரிபொருளை கொள்வனவு செய்தார்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு தான் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிடுகிறார்.
சுத்திகரிப்புக்கு பின்னர் 430 ரூபாவுக்கு வழங்க வேண்டிய பெற்றோலை 398 ரூபாவுக்கும், 587 ரூபாவுக்கு வழங்க வேண்டிய டீசலை 382 ரூபாவுக்கும் வழங்குவதாக குறிப்பிடுகிறார். இவரின் தாரான மனபாண்மையை நாங்கள் பாராட்டுகிறோம். புண்ணியம் தேடுவதற்காகவா இவர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவராக பதவி வகிக்கிறார் என்று வினவுகிறோம்.
சர்வதேச சந்தையில் சிங்கப்பூர் நாட்டின் ‘பிளெட்’ விலைச்சுட்டெண்ணுக்கு அமைவாகவே இலங்கை எரிபொருளை கொள்வனவு செய்கிறது.இந்த விலைச்சுட்டெண்ணுக்கமைய இந்த மாதம் மாத்திரம் மூன்று தடவைகள் எரிபொருளை அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.
அரசாங்கம் எரிபொருள் மீது அதிக வரி அறவிடுகிறது. மத்திய கிழக்கில் யுத்தம் ஆரம்பமானவுடன் ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, நோர்வே உட்பட பல நாடுகள் எரிபொருள் மீதான வரியை குறைத்து மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்கின்றன. திறைசேரி நிரம்பி வழிகிறது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.
அவ்வாறாயின் எரிபொருள் மீதான வரியை குறைத்து மக்களுக்கு நிவாரண விலையில் எரிபொருளை விநியோகிக்கலாம். எந்த அடிப்படையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறது என்பதை அறிந்துக் கொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. ஆகவே எரிபொருள் விலைச்சூத்திரத்தை இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.


















