-அரசாங்கம் எச்சரிக்கை-
எரிபொருள் விலைகளை தீர்மானிக்கும் சமகால நடைமுறைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்க தவறினால் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் வலுசக்தி அமைச்சு செயலாளர் உதயங்க ஹேமபால கூறுகையில், மே மாதம் 1ம் திகதிவரை ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவையும், ஒரு லீற்றர் பெற்ரோலுக்கு 20 ரூபாவையும் அரசாங்கம் மானியமாக ஏற்றுள்ளது.
இந்த மானியத்தைத் தொடர வேண்டுமானால், சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி ஒப்புதல் கிடைக்கவேண்டும். அத்துடன் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலும் இதில் தாக்கம் செலுத்தும்.
ஒருவேளை நாணய நிதியம் அனுமதி வழங்காவிட்டால், அந்த மேலதிகத் தொகையை (பெட்ரோலுக்கு 20 ரூபா, டீசலுக்கு 100 ரூபா) நுகர்வோர் மீதே சுமத்த வேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்துத் தெரிவிக்கையில்,
எரிபொருள் விலையைச் சமன்படுத்த அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு சுமார் 2,000 கோடி (20 பில்லியன்) ரூபாவை செலவிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். முழுமையான இறக்குமதி செலவை அரசாங்கமே ஏற்கும் பட்சத்தில் ஆண்டுக்கு, 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகச் செலவு ஏற்படும், இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியை உருவாக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.


















