-உண்மையை கூறிய கூட்டுத்தாபன பணிப்பாளர்-
எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கமைய எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ள நிலையில் அதனை மறுத்து, இல்லை எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டது என்று பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது எரிபொருள் விலை ஏற்றம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் தகவல் வெளியிடுகையில்:-
உலகச் சந்தையில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டால் விலை சூத்திரத்தின்படி தேசிய மட்டத்தின்படி விலையை தீர்மானிக்க முடியும். ஆனால் தற்போதைய இக்கட்டான நிலையில் விலை சூத்திரத்தின்படி விலையை தீர்மானிக்க முடியாது.
உலகச் சந்தையில் 70-78 டொலராக இருந்த ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 130 டொலராக உயர்ந்தபோது, அந்த மதிப்பை விலை சூத்திரத்தின்படி கணிப்பிட முடியவில்லை. அதன்படி இந்த விலை உயர்வு விலை சூத்திரத்தின்படி அமையவில்லை என்றார்.
இந்நிலையில் அதே அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தகவல் வெளியிடுகையில்:-
எரிபொருள் விலை என்பது விலை சூத்திரத்தின் அடிப்படையிலேயே அதிகரிக்கப்பட்டது. விலை சூத்திரம் என்பது ஒன்றும் விசித்திரமான சூத்திரம் அல்ல. எரிபொருளைக் கொண்டுவரும் செலவு மற்றும் அதற்கான ஏனைய செலவுகள் – இவற்றைத் தவிர அதில் வேறொன்றும் இல்லை.
100 ரூபாயை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், விலை சூத்திரத்தின்படி வரவேண்டிய விலையை விடக் குறைவான விலையே நிர்ணயிக்கப்படும் என அமைச்சர் கருதியிருக்கலாம்.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலை சூத்திரத்தின்படி விலையைக் கணித்து அரசாங்கத்திற்கு அறிவிக்கும். அதன் பின்னரே அரசாங்கம் முடிவெடுக்கும். கூட்டுத்தாபனம் சமர்ப்பிப்பது தான் இறக்குமதி செய்த விலை மற்றும் அதற்கான செலவு ஆகியவற்றை மட்டுமே தவிர, அந்தச் சூத்திரத்தில் வேறு எந்த விடயமும் இல்லை.
மாதத்திற்கு ஒருமுறை விலை சூத்திரத்தைக் கணிப்பது மாதத்தின் சராசரியைக் கொண்டு அல்ல, அந்த மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கையிருப்பைக் கொண்டே கணிக்கப்பட்டது. முன்பு ஒரு மாத காலத்திற்குள் உலக சந்தை விலையில் பாரிய மாற்றங்கள் இல்லாதபோது, மாதத்திற்கு ஒருமுறை இப்படிக் கணிக்க முடிந்தது. இப்போதும் அப்படியே கணிக்கப்படுகிறது. ஆனால், இப்போது ஒரு மாதம் வரை காத்திருக்க முடியாது. ஏனெனில் உலக சந்தையில் எரிபொருள் விலை வேகமாக மாறுகிறது. சூத்திரம் அதேதான். ஆனால் சூத்திரத்தைக் கணிக்கும் காலப்பகுதி மட்டுமே மாறியுள்ளது என்றார்.


















