-இருப்பு முற்றாக தீர்ந்துவிட்டதால் விலையை அதிகரித்தோம் என்கிறார் அமைச்சர்
-கையிருப்பு இருந்து விலை அதிகரிக்கப்பட்டது என்கிறது பெற்றோலிய களஞ்சியம்
-அநுர அரசாங்கத்தின் தெளிவற்ற விளக்கங்களால் அதிருப்தியில் நாட்டு மக்கள்
நாட்டில் திடீரென எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கமும், இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனமும் (CPSTL) வெளியிட்டுள்ள கருத்துக்கள் பரஸ்பரம் முரணாக அமைந்துள்ளன.
எரிபொருள் கையிருப்பு மற்றும் விலை உயர்வுக்கான காரணங்கள் குறித்து வழங்கப்பட்டுள்ள இந்த மாறுபட்ட விளக்கங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
ஏரிபொருள் விலை உயர்வு தொடர்பில் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை பணிப்பாளர் மயூரு நெத்தி குமாரகே கருத்துத் தெரிவிக்கையில், பொதுவாக முந்தைய மாதத்தின் விலைகளை சரிசெய்தே நாங்கள் விலைகளை அதிகரிக்கிறோம். தற்போது எங்களிடம் 30 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு நிலையாக இருந்தபோதிலும், அடுத்த மாதத்திற்காக வரும் கப்பல்களின் எரிபொருள் விலை பெருமளவு அதிகரித்து வருகின்றது. எனவே, தற்போதுள்ள இருப்புகளைப் பாதுகாத்து, விலையை சமநிலைப்படுத்த நாங்கள் எதிர்பார்த்தோம்.
அதன்படி, எரிபொருள் விலைகள் ஒரே நேரத்தில் மிக அதிகளவில் உயர்வதைத் தவிர்க்கவும், இருக்கும் இருப்புகளை மாதங்களுக்கு இடையில் கவனமாகப் பகிர்ந்து பயன்படுத்தவும் விலையை சமநிலைப்படுத்தினோம்.
எரிபொருள் பதுக்கல் மாபியாக்களைக் கட்டுப்படுத்துவதுடன், வரிசைகள் உருவாகாமல் பொதுமக்கள் நீண்ட காலத்திற்கு ஒரே விலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்கவும் எதிர்பார்க்கிறோம். உலகச் சந்தையில் விலை குறைந்தால், அடுத்த சில நாட்களில் நிச்சயமாக எமது எரிபொருள் விலைகளைக் குறைக்க முடியும் எனத் தெரிவித்தார்.
இருப்பினும், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 37.76 வீதம் அதிகரித்துள்ளது. இதனுடன் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலையும் பெருமளவு உயர்ந்துள்ளது.
குறிப்பாக, ஒட்டோ டீசல் 99.99 வீதம், சுப்பர் டீசல் 99.6 வீதம், பெற்றோல் (92) 75 வீதம் மற்றும் பெற்றோல் (95) 79 வீதம் வீதம் விலை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் நாட்டில் எரிபொருள் நுகர்வு வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது.
பொதுவாக ஒரு நாளைக்கு சுமார் 4,000 மெற்றிக் தொன் டீசல் நுகரப்படும் நிலையில், கடந்த மார்ச் 1 முதல் 9 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் மேலதிகமாக 23,000 மெற்றிக் தொன் டீசலும், 13,000 மெற்றிக் தொன் பெற்றோலும் நுகரப்பட்டுள்ளது.
இந்த திடீர் நுகர்வு அதிகரிப்பு காரணமாக, நாட்டில் இருந்த எரிபொருள் கையிருப்பு முற்றிலும் தீர்ந்துவிட்டது.
இதனால், புதிய விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களின் செலவை ஈடுகட்ட இந்த விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாததானது.
சர்வதேச சந்தையில் விலை உயரும் போது, உள்நாட்டு விலையை அதிகரிக்காவிட்டால், தனியார் நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதியைக் குறைத்துக்கொள்ள அல்லது நிறுத்தக்கூடும். இது நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.
பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பாரிய விலை அதிகரிப்பைச் செய்யாமல், கட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டுமே இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
கடந்த முதலாம் திகதி மாதாந்த விலை சூத்திரத்தின்படி விலை திருத்தம் செய்யப்பட்ட நிலையில், வெறும் 9 நாட்களில் மீண்டும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















