-ஐ.ம.சக்தி எம்.பி. அலவத்துவல-
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை பிற்போடுவதற்கு அரசியல்வாதிகள் கையில் எடுக்கும் ஆயுதம் எல்லை நிர்ணயம். எனவே அந்த எல்லை நிர்ணய ஆயுதத்தை மீண்டும் கையில் எடுக்காமல் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறையில் திருத்தம் மேற்கொண்டு, தேர்தலை நடத்தாமல், பொதுத் தேர்தலில் கிடைக்கப்பெற்ற வாக்குகளை தக்கவைக்கும் நோக்கில் அவசரமாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை இந்த அரசாங்கம் நடத்தியது. தற்போதுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தம் நல்லாட்சி அரசாங்க காலத்தில் கொண்டுவரப்பட்டது. அதில் தவறு இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதனாலே தேர்தல் முறையில் திருத்தம் மேற்கொண்டு, தேர்தலுக்கு செல்ல வேண்டும் என நாங்கள் தெரிவித்திருந்தோம்.
தற்போது அதிகமான உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை தனித்து ஒரு கட்சிக்கு அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் வெற்றிகொண்ட அதிகமான மன்றங்களின் ஆட்சி, ஏனைய கட்சிகளின் உதவியுடனே அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அந்த சபைகளின் தலைவர்களுக்கு சபையை சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறையில் திருத்தம் மேற்கொண்டு பழைய முறையில் நடத்தியிருந்தால், இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது.
இதேவேளை மாகாண சபைகளுக்கான தேர்தலை பிற்போடுவதற்கு ஆட்சியாளர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் எல்லை நிர்ணயம். ரணில் விக்ரமசிங்கவும் அதனை கையில் எடுத்தார். என்றாலும் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை இருப்பதால் தேர்தலை நடத்த பணம் இல்லை என்று தெரிவித்ததிருந்தார். ஆனால் தற்போது தேர்தலை நடத்த பணம் இருப்பதாகவும் தேர்தலை நடத்துவதற்கு முறை ஒன்று இல்லை என்றும் தற்போதையாய் ஜனாதிபதி தெரிவிக்கிறார்.


















