-முன்னாள் ஜனாதிபதி ரணில்-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் எவ்வளவுதான் வளர்ச்சியடைந்தாலும், மனித நனவு நிலையை அதனால் ஒருபோதும் ஈடு செய்ய முடியாது என்றும், மதம் என்பது மனித வாழ்விற்கு என்றும் அவசியமானது என்றும் தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நிகழ்வின் வரவேற்புப் பாடல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்டது என்பதை அறிந்த ரணில் விக்ரமசிங்க, இது குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஏஐ இன் அசுர வளர்ச்சி ஒரு கட்டத்தில் மதம் தேவையற்றது என்ற நிலையை உருவாக்கும் என்று சிலர் வாதிடுவதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த வாதத்தை முற்றாக நிராகரித்தார்.
சமீபத்தில் தான் ChatGPT-யிடம் ஒரு கேள்வியைக் கேட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பௌத்த தர்மத்தின் ‘தம்மபத’ ஸ்லோகங்களைக் குறிப்பிட்டு, மனித மனமா அல்லது செயற்கை நுண்ணறிவா, இதில் எது உயர்ந்தது? என்று அவர் வினவியுள்ளார்.
அதற்கு அந்த ஏஐ தொழில்நுட்பமானது, ‘மனித மனமே மேலானது’ என்பதை ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு என்பது வரையறுக்கப்பட்ட திறன்களைக் கொண்டது, ஆனால் மனித மனம் எல்லையற்றது என்பதே அதன் காரணமாகும்.
ஏஐ தொழில்நுட்பத் துறையில் உலக நாடுகள் மேற்கொண்டு வரும் முதலீடுகள் குறித்து அவர் ஆச்சரியம் வெளியிட்டார்.
அமெரிக்கா சுமார் 300 பில்லியன் டொலர் முதலீடு செய்துள்ளது அதேபோன்று சீனா பாரிய முதலீடுகளைச் செய்து வருகின்றது.
எதிர்காலத்தில் செல்வம் என்பதை விட ‘அறிவு’ என்பதே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
பௌத்த தத்துவங்களையும் செயற்கை நுண்ணறிவையும் எவ்வாறு ஒன்றிணைப்பது என்பது குறித்து பௌத்தர்கள் சிந்திக்க வேண்டும் என்றும், இது அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


















