க.பொ.த சாதாரணதர பரீட்சை -2025 (2026) பெறுபேறுகள் ஏப்ரல் 30ம் திகதிக்கு பின்பே வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்திக் குறிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, இந்த ஆண்டிற்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதலாம் கட்டம் மார்ச் 12 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையும், இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.
சாதாரணதரப் பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடத்தப்பட உள்ளதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இந்த மதிப்பீட்டு மற்றும் செயன்முறைப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைந்த உடனேயே, பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதித் திகதி தீர்மானிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
















