இலங்கையின் உணவுத் தரநிலைகளை மீறியதாக முன்வைக்கப்பட்ட 28 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 84,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டமை தொடர்பில் Bing Chun Sri Lanka நிறுவனம் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது, நிறுவனத்தின் ஐஸ்கிரீம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, குறித்த ஐஸ்கிரீம்கள் நிர்ணயிக்கப்பட்ட உணவுத் தரநிலைகளைப் பூர்த்தி செய்யவில்லை என கொழும்பு மாநகர சபையின் ஆய்வக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, 28 குற்றச்சாட்டுகளையும் நிறுவனம் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் 84,000 ரூபா அபராதம் விதித்தது.
இது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளுக்குப் பதிலளித்துள்ள Bing Chun நிறுவனம், வெண்ணிலா மற்றும் சாக்லேட் ஐஸ்கிரீம் என விற்பனை செய்யப்பட்ட இரண்டு தயாரிப்புகளின் கொழுப்புச் சத்து மற்றும் மொத்தத் திண்ம அளவு தொடர்பிலேயே ஆய்வகப் பரிசோதனைகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த தயாரிப்புகள் நச்சுத்தன்மை கொண்டவை, உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிப்பவை அல்லது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றவை என ஆய்வக அறிக்கைகளில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை என்றும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
“உணவுப் பொருளொன்றின் கலவை தொடர்பான நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளைப் பூர்த்தி செய்யாமையும், அது உடல்நலத்திற்குப் பாதுகாப்பற்றது அல்லது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றது எனத் தீர்மானிக்கப்படுவதும் வெவ்வேறான விடயங்களாகும்” என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கிச் செயற்படுவதன் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ள நிறுவனம், தயாரிப்புகளின் கலவை, தரக்கட்டுப்பாட்டு விவரக்குறிப்புகள் மற்றும் தயாரிப்பு விளக்கங்களை மீளாய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், உரிய பரிசோதனை நடைமுறைகள் ஊடாக மேலதிக தயாரிப்புப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதுடன், நிறுவனத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் உள்ளகக் கண்காணிப்பு மற்றும் தர உறுதிப்பாட்டு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்களின் கலவை தொடர்பான தரநிலைகளைப் பூர்த்தி செய்யாமையை, அவை மனித உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதற்கான நேரடி ஆதாரமாகக் கருத வேண்டாம் என ஊடகங்களிடமும் பொதுமக்களிடமும் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக்கூடிய தவறான, வழிதவறச் செய்யும் அல்லது அவதூறான கருத்துகளுக்கு எதிராகச் சட்ட உரிமைகளைப் பயன்படுத்தும் உரிமை தமக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் ஏற்பட்டுள்ள கவலைகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ள Bing Chun Sri Lanka நிறுவனம், உள்ளூர் சட்டவிதிமுறைகளுக்கு இணங்கிச் செயற்படுவதிலும் நுகர்வோரின் நம்பிக்கையைப் பேணுவதிலும் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

















