சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான அனைத்து மீளாய்வுகளையும் 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்தக் கூட்டத் தொடருக்கு இணையாக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வங்கி ஆளுநர் ஊடகம் ஒன்றுக் வழங்கிய விசேட நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேர்காணலில் மேலும் தெரிவிக்கையில்,வொஷிங்டனில் நடைபெறும் இந்த சந்திப்புகள் எமக்கு மிகவும் முக்கியமானவை. ஏனெனில், நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைக்கிறது. அதேபோல, இருதரப்பு மற்றும் பல்தரப்பு ரீதியாக ஏனைய பிரதிநிதிகளையும் முதலீட்டாளர்களையும் சந்திப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது.
கடந்த வாரம் இலங்கை ஐந்தாவது மீளாய்வை நிறைவுசெய்தது. அந்த மீளாய்வு அறிக்கை அடுத்த டிசம்பர் மாதம் பணிப்பாளர் சபையில் சமர்ப்பிக்கப்படும். அதில் சில முக்கியமான விடயங்கள் உள்ளன. மிக முக்கியமானது, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவது. அது தவிர, அரச நிறுவனங்களின் சீர்திருத்தம் போன்ற மேலும் பல முக்கிய சீர்திருத்தங்கள் உள்ளன.
செலவினங்களை ஈடுசெய்யும் வகையிலான விலையிடல், வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட நிதி உறுதிப்பாடு என்பன அவற்றில் சில மேலும் இரண்டு விடயங்கள் உள்ளன. பொருளாதார வீழ்ச்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் ஆதரவளிப்பது இலங்கை மக்களுக்கு மிகவும் முக்கியமானது. மற்றையது, ஊழல் மற்றும் அரச நிர்வாகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது. ஐந்தாவது மீளாய்வு என்பது இந்தப் பயணத்தின் அரைவாசி தூரம். நாம் 8 மீளாய்வுகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதனை 2027ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறைவுசெய்ய எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


















