நுவரெலியா சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் ஒரு கோடியே 15 இலட்சம் செலவில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று முன்தினம் புதன்கிழமை சம்பிரதாய பூர்வமாக நாட்டப்பட்டது.
நுவரெலியா ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவரும், நுவரெலியா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மற்றும் சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய பரிபாலன சபையின் ஆயுட்காலம் காப்பாளருமான வீ.ஆதிமூலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக முன்னாள் ரோட்டரிக் கழகத்தின் ஆளுநர் குமார் சுந்தராஜ் தம்பதியினரும், முன்னாள் ரோட்டரி கழகத்தின் ஆளுநர் வைத்தியர் விஜயகுமாரன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், உட்பட ஆலய நிர்வாக சபையினரும் கலந்துகொண்டனர்.
இந்த கட்டடத்திற்கான ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாவை இந்தியா டில்லி தெற்கு ரோட்டரி கழக உறுப்பினர்களான சன்ஞய் குப்தா, தினேஸ் கோயல், சன்தீப் அகர்வால் மற்றும் முகேஸ் அகர்வால் ஆகியோர் நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.
டில்லி ரோட்டரிக் கழகத்தின் அனுசரணையுடன் இந்த ஆலயத்தில் 3 கோடி 60 இலட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட தியான மண்டபம் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், இதன் இரண்டாம் கட்டமாக மேலும் ஒரு கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


















