அம்பாறை – நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் ஒரு தாசாப்தத்திற்கு மேலாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் கவனிப்பாரற்று விடப்பட்டுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெரும் தொகையில் சகல வசதிகளும் கொண்ட கிராமமாக இவ்வீடமைப்புத்திட்டம்
சவூதி அரசாங்கத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்டபோதிலும் பல வருடங்களாக மக்களுக்கு கையளிக்கப்படாம் இன்று காடு மண்டிக் காணப்படுகின்றது.
சவூதி அரேபியாவின் நன்கொடை நிதியத்தின் 552 மில்லியன் ரூபா நிதியுதவியில் சுனாமி வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இவ்வீட்டுத்திட்டத்துக்கான ஒப்பந்தம் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டு, வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சிடம் வழங்கப்பட்டது.
சுமார் 40 ஏக்கர் காணியில் 500 வீடுகள் உட்பட பல்தேவை கட்டிடம், சந்தைக் கட்டிடம், ஆண்கள் பாடசாலை, பெண்கள் பாடசாலை, பள்ளிவாயல், வைத்தியசாலை, பஸ்தரிப்பு நிலையம்,
விளையாட்டு மைதானம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக பேரியல் அஷ;ரப் பதவி வகித்தார்.
சுமார் 40 ஏக்கர் காணியில் அமைந்துள்ள இந்த வீட்டுத்திட்டத்தில் 500 வீடுகள் உள்ளன இந்த வீட்டுத் திட்டம் இது வரை மக்களுக்கு கையளிக்கப்படாததன் காரணம்
நீதி மன்றத் தீர்ப்பு மற்றும் அரசியல் காரணங்கள் என தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இங்கு வீடுகள், சந்தைக் கட்டிடம், பாடசாலை, பள்ளிவாசல் மற்றும் விளையாட்டு மைதானம், பாதைகள்
போன்ற அனைத்து வசதிகள் இருந்தும் கடந்தகாலம் ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் இவ்வீடுகளை கையளிக்காமல் மரங்களாலும் புற்களாலும் சூழப்பட்ட
காடு மண்டி வனமாக தற்போது காட்சி அளிக்கின்றது. தற்போது இம்மீள்குடியேற்ற கிராமம் காடுகளால் சூழப்பட்டு, கொடிய விச ஜந்துக்கள், யானை மற்றும் ஆபத்தான விலங்குகள்,
பிராணிகளின் உறைவிடமாக மாறியுள்ளதுடன் வீடுகள் யாவும் சேதமாகியுள்ளது. இவ்வீடுகளை பகிர்ந்தளித்தாலும் கூட பயனாளிகளால் உடனடியாக குடியேறமுடியாத நிலையில்
மிகவும் மோசமாக சேதமடைந்த நிலையிலேயே வீடுகள் காடுமண்டிய நிலையில் காணப்படுகின்றன.
எனவே தான் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நுரைச்சோலையில் கட்டப்பட்ட 500 வீடுகளையும் விரைவில் மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பல காலமான மக்கள் கோரிக்கையாகும்.


















