இலங்கையில் சில வருடங்களுக்கு முன் மிகவும் ஊழல் நிறைந்த மற்றும் மோசடியான தரமற்ற மருந்து மோசடி நடந்து கொண்டிருந்தவேளை, அதை நாட்டுக்கு வெளிக்கொணர்ந்து, அம்பலப்படுத்தி, அப்போதைய சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கூட ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டு வந்தது. என கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ, அப்போது நடந்து வந்த இந்த தரமற்ற மருந்து மோசடிகள் புதிய அரசாங்கத்துடன் முடிவுக்கு வரும் என்றே கருதப்பட்டன. ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் கீழும் தரமற்ற இந்த மருந்து மாபியா தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் கூட இரண்டு பெண்கள் தரமற்ற தடுப்பூசி பயன்படுத்தியதால் பரிதாபமாக உயிரிழந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ‘மூச்சு’ திட்டத்தின் கீழ், மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு 46.5 லட்சம் மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரே மதாச மேற்கண்டவாறு தெரிவித்தார், இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மஹியங்கனை ஆதார வைத்தியசாலை கடுமையாக சேதமடைந்தது. ஆகையால், இந்த வைத்தியசாலையின் தேவைப்பாடுகளை அடையாளம் கண்டு ரூபா.38 இலட்சம் பெறுமதியான Dialog Single Pump ஒன்றும், ரூபா.7.6 இலட்சம் பெறுமதியான Blue dot RO System 600 Gpd இயந்திரமொன்றும் இன்று இவ்வாறு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன. சிறுநீரக நோயாளிகளின் நலன் கருதியே இந்த உபகரணத் தொகுதிகள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தி தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் தொடர்பில் குரல் எழுப்பிய சமயங்களில், தற்போதைய அரசாங்கத்தைச் சேர்ந்த அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இதற்கு ஆதரவு தெரிவித்து மௌனம் காத்து வந்தனர். தரமற்ற மருந்துப் பொருட்கள் கொள்வ னவை நிறுத்துவோம் என்று தேர்தல் மேடைகளில் கோஷங்களை எழுப்பிய தற்போதைய ஆளும் தரப்பு அமைச்சர்கள், இன்று மக்களுக்கு தரமற்ற மருந்துகளையும் தடுப்பூசிகளையும் விநியோகித்து வருகின்றனர். தற்போதைய சுகாதார அமைச்சர் உட்பட அனைத்து சுகாதார அதிகாரிகளும் இந்த மருந்துப் பொருட்கள் மாபியாவை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


















