ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான பிளவினால் இருதரப்பும் தோல்விகளை சந்திக்கிறது. கடந்தகால கசப்புணர்வுளை கடந்து நாட்டுக்காக இரு கட்சிகளும் ஒன்றிணைவது அவசியமானது என முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க கூறினார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி திஸாநாயக்கவின் ஜனன தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் கூறுகையில், 2 020 பொதுத் தேர்தலின் பின்னர் எம்மில் இருந்து பிரிந்து சென்றவர்களை, இன்று சுமார் 5 ஆண்டுகளின் பின்னர் ஒருமித்து சந்திக்க கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி என்பவற்றின் உறுப்பினர்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகளைப் போன்றவர்கள்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு பின்னரான ஒரு பலமான குழுவை உருவாக்கியிருக்கின்றார். சஜித் பிரேமதாச உள்ளிட்ட நாம் அனைவரும் அமைச்சரவை அமைச்சர்களாக பதவி வகித்திருக்கின்றோம். ஆனால் இன்று நாம் அனைவரும் காணாமல் போயிருக்கின்றோம்.
இன்று ஐக்கிய தேசிய கட்சிக்கும் வெற்றியில்லை, ஐக்கிய மக்கள் சக்திக்கும் வெற்றியில்லை. கடந்த ஜனவரி முதல் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகி ன்றோம். அதற்கமைய இதுவரையில் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நான் தனிப்பட்ட ரீதியில் இதற்கான முன்மொழிவொன்றை முன்வைத்திருக்கின்றேன். அதற்கமைய கட்சியின் உள்ளகக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையில்லை. இரு கட்சிகளின் தலைவர்களும் அவரவர் பதவிகளை வகிக்க முடியும்.
அதேவேளை தேர்தலொன்றுக்குச் செல்லும்போது ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். அவ்வாறு செய்யும் பட்சத்தில் பாரியளவிலான வாக்குகளை பெற்றுக் கொண்டு, எமது வெற்றியையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடியும்.
அண்மைக்காலமாக எம்மிரு கட்சிகளுமே தொடர்ந்தும் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் வயதானவர்களாகிவிட்டோம். இன்னும் நாட்டுக்காக எதையும் செய்யவில்லை. ஆனால் முன்னாள் ஐ.தே.க. தலைவர்கள் தமது 30, 35 வயதுகளில் வரலாறுகளைப் படைத்துள்ளனர்.
எமக்கும் அவ்வாறான எதிர்பார்ப்புக்கள் உள்ளன. எனவே பழைய கோபங்களை மறந்து நாட்டுக்காக ஒன்றிணைந்து வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.


















