பாராளுமன்றில் யாருமில்லாத நேரம் பார்த்து நாமல் ராஜபக்ச தூய்மையானவர் போன்று எங்களைப் பேசி விட்டு சென்று விடுவார். பொலிஸ் திணைக்களம் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்று அவர் கூறுகின்றார். இவர்களது ஆட்சியில் 180 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அரசியல் பரிந்துரைகளுடன் நியமிக்கப்பட்டவர்கள் என முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்,
கடந்த மாதங்களில் கொள்கலன் விவகாரத்தை தூக்கிப்பிடித்தவர்கள் இன்று திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை தூக்கிப்பிடிக்கின்றார்கள். கொள்கலன் விவகாரம், புத்தர் சிலை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்டாலும் கடந்த கால ஊழல் மோசடிகளில் இருந்து எவரும் தப்ப முடியாது.
போதைப்பொருள் குற்றச்சாட்டு, அரச நிதி மோசடியாளர்கள் தான் இன்று தேசிய பாதுகாப்பு மற்றும் பொலிஸ் சுயாதீனம் பற்றி பேசுகிறார்கள். மத்திய வங்கி பிணைமுறி மோசடியாளர்கள், மோசடி எதுவும் இடம்பெறவில்லை என்று பிற்குறிப்பு எழுதியவர்கள் இன்று தேசிய பாதுகாப்பு குறித்து எமக்கு வகுப்பு எடுக்கின்றார்கள்.
ஜூலம்பிட்டிய அமரேவை பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு அரசியல் செய்தவர்களின் மகன் இன்று எமக்கு தேசிய பாதுகாப்பு பற்றி வகுப்பு எடுக்கின்றார். போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கமைய நிமல் லான்சாவை பொலிஸார் கைது செய்ய சென்ற போது மஹிந்த ராஜபக்ச சென்று நிமல் லன்சாவை கட்டிப்பிடித்தார். முடிந்தால் இல்லை என்று கூறுங்கள் பார்க்கலாம்.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் எவரையும் நாங்கள் பாதுகாக்கவில்லை. இன்றும் அவர்கள் சிறையில் உள்ளனர் எவரையும் நாங்கள் பாதுகாக்கவில்லை என்றார்.


















