வர்த்தக கப்பல்களுக்கான பாதுகாப்பு குழுவினருக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளின் மூலம் கடந்த 4 மாதங்களில் மாத்திரம் சுமார் 6 இலட்சம் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணியாக ஈட்டியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தச் செயற்பாடுகளின் ஊடாக, நான்கு மாத காலப்பகுதியில் 598,250 அமெரிக்க டொலர்கள் வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாக கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஹர்ஷ டி.சில்வா தெரிவித்தார்.
இலங்கை கடற்படையானது வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, இந்த வர்த்தக கப்பல் பாதுகாப்பு வசதிகளை வழங்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த விசேட நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ரியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வா இந்தத் தகவல்களை வெளியிட்டார். நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிப்பதில் இவ்வாறான கடல்சார் சேவைகள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















