இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற்றுவரும் 13 ஆவது ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நியூசிலாந்தை இன்று பிற்பகல் சந்திக்கவுள்ளது.
இதுவரை 3 போட்டிகளில் விளையாடிய இலங்கை, 2 தோல்விகளை சந்தித்ததுடன் அதன் ஒரு போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட்டது.
இப் போட்டி முடிவுகளின் பிரகாரம் ஒரே ஒரு புள்ளியுடன் அணிகள் நிலையில் இலங்கை 7ஆம் இடத்தில் இருப்பதுடன், அதன் அரை இறுதி வாய்ப்பு தளம்பல் நிலையில் இருக்கிறது.
எஞ்சியுள்ள நான்கு போட்டிகளிலும் மிகச் சிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் வெற்றிபெறும் அதேவேளை, தற்போது முன்னிலையில் உள்ள அணிகள் பின்னடைவு கண்டால் மாத்திரமே இலங்கையினால் அரை இறுதிக்கு முன்னேற முடியும்.
அல்லது தனது ஓய்வுக்கு முன்னர் மகளிர் உலகக் கிண்ணத்தில் இலங்கையை அரை இறுதிக்கு முன்னேறச் செய்வதே தனது இலக்கு என கூறிய அணித் தலைவி சமரி அத்தப்பத்துவின் எதிர்பார்ப்பு ஈடேறாமல் போய்விடும்.
நியூசிலாந்துக்கு எதிராக காலியில் 2023 இல் நடைபெற்ற மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை வெற்றிபெற்றிருந்தது.

அதன் பின்னர் மகளிர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 2024 இல் நடைபெற்ற போட்டியில் சமரி அத்தபத்து ஆட்டம் இழக்காமல் 195 ஓட்டங்களைக் குவித்து, அப் போட்டியிலும் இலங்கையை வெற்றி அடையச் செய்திருந்தார்.
ஆனால் அதன் பின்னர் அவரது துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்த ஆக்ரோஷம் வெளிப்படவில்லை.
இன்றைய போட்டியில் சமரி அத்தபத்து உட்பட அணியில் இடம்பெறும் அனைவரும் சகலதுறைகளிலும் அதிகபட்ச ஆற்றல்களை வெளிப்படுத்தினால் மாத்திரமே இலங்கையினால் வெற்றிபெற முடியும்.
இது இவ்வாறிருக்க, தனது முதலிரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலியாவிடமும், தென் ஆபிரிக்காவிடமும் தோல்விகளைத் தழுவிய நியூசிலாந்து, 3 ஆவது போட்டியில் பங்களாதேஷை 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது வெற்றிக்கணக்கை ஆரம்பித்தது.
அந்த வெற்றியைத் தொடர்ந்து மிகுந்த நம்பிக்கையுடன் நியூசிலாந்து இன்றைய போட்டியில் இலங்கையை எதிர்கொள்ளவுள்ளது.

















