-தவிசாளர் டானியல் வசந்தன்-
மன்னார் நகர எல்லைக்குள் நத்தார், புதுவருட பண்டிகை கால வியாபார நடவடிக்கைகளுக்கு கடைகள் அமைப்பதற்கான இடம் ஏல விற்பனை மூலம் வழங்கப்பட்ட நிலையில் நகர சபைக்கு சுமார் 4 கோடிக்கும் அதிகமான வருமானம் கிடைக்க பெற்றுள்ளதாகவும், கடந்த காலங்களில் ஊழல் இடம் பெற்றுள்ளமைக்கு குறித்த வருமானம் ஒரு எடுத்துக் காட்டு எனவும் மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையில் சனிக்கிழமை அவர் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
மன்னார் நகர சபையினால் 2025 ஆம் ஆண்டுக்கான பண்டிகைக்கால வியாபார நிலையங்களை அமைத்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏல விற்பனை மூலம் இடம் வழங்கப்பட்டது. மன்னார் நகர சபை பிரிவில் 339 தற்காலிக வியாபார நிலையங்களை அமைக்க இடம் அடையாளம் காணப்பட்டது.
அதில் 284 கடைகள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வரை ஏல விற்பனை செய்யப்பட்டுள்ளது.அதன் ஊடாக மன்னார் நகரசபைக்கு 4 கோடியே 85 ஆயிரத்து 866 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
மேலும் 55 கடைகள் ஏல விற்பனைக்கு செல்ல உள்ளது.அதனூடாக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.குறித்த வருமானங்களை வைத்துக் கொண்டு மன்னார் நகர சபை பிரிவில் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த குறித்த நிதி 2026 ஆம் ஆண்டு பாதீட்டில் பயன்படுத்தப்பட உள்ளது.
மன்னார் மாவட்டத்தில் அனர்த்த நிலை ஏற்பட்ட போது நகர சபைக்கு வருமான இழப்பு ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது.ஆனால் கடந்த காலங்களை விட வெளிப்படை தன்மையுடன் ஏல விற்பனை இடம் பெற்றமையால் இம்முறை 4 கோடிக்கும் மேற்பட்ட வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் முந்தைய நிர்வாகங்களினால் எவ்வாறு ஊழல் இடம் பெற்றுள்ளது என்பதற்கு இது ஒரு முன் உதாரணமாக இருக்கிறது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மிகவும் குறைந்த அளவிலான வருமானமே மன்னார் நகரசபைக்கு கிடைக்கப்பெற்றது என்றார்.


















