இந்தியாவின் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் ஊடாக இன்று புதன்கிழமை அதிகாலையில் ‘மொந்தா’ புயல் கரையைக் கடந்தது.
வங்களா விரிகுடாவில் தென்மேற்கு – தென்கிழக்குப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘மொந்தா’ புயல் உருவானது. இந்தப் புயலானது தமிழ்நாடு – ஆந்திராவை நோக்கி மணிக்கு 17 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், அதி தீவிர புயலாக வலுபெற்றது.
இந்தப் புயலானது இன்றைய தினம் அதிகாலையில் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் ஊடாக கரையைக் கடந்தது.
இதன்போது 110 கிலோ மீற்றர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. மேலும் அங்கு விடிய, விடிய இடி, மின்னலுடன் கடும்மழை பெய்துள்ளது.
இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.
புயல் காரணமாக ஆந்திராவில் 3,778 கிராமங்கள் பாதிக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் மொந்தா புயல் காரணமாக 1.76 இலட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு அழிந்ததாக அவர் தெரிவித்தார். இந்தப் புயல் காரணமாக கபுலுபடாவில் 12.5 செ.மீ, விசாகப்பட்டினத்தில் 12 செ. மீ மற்றும் ஆனந்தபுரத்தில் 11.7 செ.மீ அளவில் மழை பதிவானது.
புயல் காரணமாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வர இருந்த 6 விமானங்களும், சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்ல இருந்த 3 விமானங்களும் இரத்து செய்யப்பட்டன. ஆந்திராவில் கடும்மழை பெய்து வருவதால் 75 ரயில்கள் இரத்து செய்யப்பட்டன.
‘மொந்தா’ புயல் காரணமாக ஒடிசாவிலும் கடும்மழை பெய்துள்ளது. அங்குள்ள மல்கன்கிரி, கோரபூட், ராயகடா, கஜபதி, கஞ்சம், நபரனங்கபூர் உட்பட 8 மாவட்டங்களில் கடும் மழை பெய்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பேரிடர் மீட்புத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் என 5 ஆயிரம் பேர் களம் இறக்கப்பட்டு கண்காணிப்புப் பணி மேற்கொண்டனர்.

















