புதிய கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக கல்விச் சபையை நிறுவுவதற்கான முதற்கட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக கூறியுள்ள பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, அதற்காக நியமிக்கப்பட்ட விசேட நிபுணர்குழு அறிக்கைக்கு பாராளுமன்ற துணைக்குழு உத்தியோகபூர்வமான ஒப்புதலை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கல்விச் சபையை நிறுவுவதற்கான பாராளுமன்றத் துணைக் குழுவின் தலைவரும் தொழில் பிரதி அமைச்சருமான மஹிந்த ஜயசிங்க இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கல்வித் துறையில் காத்திரமான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த வருடம் ஒக்டோபர் 10 ஆம் திகதி என்னிடம் கையளிக்கப்பட்டது. அந்த அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத் துணைக் குழுவில் விரிவாக ஆராயப்பட்டதுடன் எமது கருத்துக்களும் ஆலோசனைகளும் ஏற்கனவே அதில் உள்வாங்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த அறிக்கை சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டு குழு உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த நிபுணர் குழு அறிக்கையை கல்வி அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி கல்வி அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழு கூடவுள்ளதுடன் அன்றைய தினம் இதற்கான அங்கீகாரம் பெறப்படும். அதனைத் தொடர்ந்து இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து கல்விச் சமூகத்தின் நேரடிப் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
இதன்படி ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும். இதன்போது கிடைக்கப்பெறும் காத்திரமான ஆலோசனைகள் இறுதி அறிக்கையில் முறையாக உள்வாங்கப்படும்.
இறுதி அறிக்கையானது வெறும் ஆவணமாக மாத்திரம் எஞ்சியிருக்காமல் அதனை ஒரு சட்டமாக நடைமுறைப்படுத்துவதே எமது இலக்காகும். அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை பாராளுமன்றத்தினூடாக மிக விரைவாக முன்னெடுக்க நாம் தீர்மானித்துள்ளோம் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


















