-பாட்டலி சம்பிக்க ரணவக்க-
கல்விச் சீர்திருத்தங்கள் போன்ற பாரிய பணிகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் தகுதியற்றது எனவும் அவர்கள் பேருந்து நிலையங்களுக்கு வர்ணம் பூசுதல் அல்லது சிறிய வீதிகளைப் புனரமைத்தல் போன்ற சிறிய வேலைகளையே செய்யத் தகுதியானவர்கள் எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை ஒத்திவைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தச் சீர்திருத்தங்கள் மற்றவர்களுடையது என்றும், அதனைத் தமது கொள்கை என அரசாங்கம் காட்டிக்கொள்ள முயன்றதாகவும் குற்றம் சாட்டினார். இக்கல்விச் சீர்திருத்தம் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்டது என்றும், பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைத் தேசிய மக்கள் சக்தியின் கொள்கை என தவறாகக் குறிப்பிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் எதிர்ப்பு மற்றும் மகா சங்கத்தினரின் கடும் எதிர்ப்பு காரணமாகவே ஜனாதிபதி இன்று இந்த விடயத்தில் பின்வாங்கியுள்ளாரே தவிர, சரியான புரிதலுடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
நாட்டிற்குத் தேவையான மனிதாபிமானம் மிக்கவர்களை உருவாக்குவதற்குப் பதிலாக, வெறும் வேலை வாய்ப்பை மட்டும் இலக்காகக் கொண்ட நபர்களை உருவாக்கினால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என ரணவக்க மேலும் தெரிவித்தார்.


















