-பெண் ஊடகவியலாளரை அசிங்கமாக திட்டிய பொலிஸார்-
-சேகரித்த செய்திக் குறிப்புக்களையும் பறித்து அட்டூழியம்-
இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை சுதந்திர ஊடக இயக்கம் கடுமையாக கண்டித்துள்ளது.
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஈரான் நாட்டைச் சேர்ந்த கடற்படையினரை சந்தித்து தகவல் சேகரிப்பதற்கு தடை விதித்துள்ள பொலிஸார், அங்கு பெண் ஊடகவியலாளர் ஒருவரினால் சேகரித்த செய்திக் குறிப்புக்களையும் பறிமுதல் செய்து அராயகத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றதாகக் கூறப்படும் இச் சம்பவத்தை சுதந்திர ஊடக இயக்கம் கடுமையாக கண்டித்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிலோன் டுடே ஊடகத்தின் ஊடகவியலாளர் சுலேச்சனா ராமையா தெரிவிக்கையில்:-
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஈரான் நாட்டைச் சேர்ந்த கடற்படையினரை சந்தித்து தகவல் சேகரித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சிலர் தங்களை பொலிஸார் என அடையாளப்படுத்திக் கொண்டு செய்தி செகரிப்பதற்கு தடை விதித்திருந்தனர்.
மேலும் அந்த நேரத்தில் அங்கு இருந்த ஈரான் தூதரக அதிகாரி ஒருவரின் மொழிபெயர்ப்பு உதவியுடன் ஈரான் கடற்படையினரிடமிருந்து பெறப்பட்டிருந்த தகவல்கள் குறிப்புகளை பறித்துச் சென்றனர்.
இதுமட்டுமல்லாமல் சம்பவத்தின் போது தன்னை அவமதிக்கும் வகையில் அசிங்கமான வார்த்தைகளாலும் பொலிஸார் திட்டியிருந்தனர். இச் சம்பவம் தொடர்பில் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தேன். இருப்பினும் முறைப்பாட்டின் பதிவு இலக்கத்தினை தருவதற்கு பொலிஸார் மறுத்துவிட்டனர்.
இந்த சம்பவம் ஊடகவியலாளர்கள் தங்களது தொழில்முறை பணிகளை சுதந்திரமாக மேற்கொள்ளும் உரிமைக்கு எதிரான தேவையற்ற பொலிஸ் தலையீடாகும் என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த சம்பவத்தை உடனடியாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் அதிகாரிகளிடம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


















