இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவைச் (1TS) சேர்ந்த ‘திர்’ (Tir), ‘சுஜாதா’ (Sujata) ஆகிய இந்தியக் கடற்படைக் கப்பல்களும், ‘சாரதி’ (Sarathi) என்னும் இந்தியக் கடலோர காவல்படைக் கப்பலும் நல்லெண்ணப் பயணமாக 2026 அக்டோபர் 26 முதல் 28 வரை கொழும்புக்கு வருகை தந்துள்ளன.
கொச்சி தளத்திற்குத் திரும்புவதற்கு முன்பு, சீசெல்ஸின் போர்ட் விக்டோரியா மற்றும் மாலத்தீவின் மாலே ஆகிய இடங்களுக்குச் செல்லும் நெடுந்தூரப் பயிற்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக இப்பயணம் அமைந்துள்ளது.
இந்தியக் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் நட்பு நாடுகளின் இளம் அதிகாரி பயிற்சி பெறுநர்களுக்கு அடிப்படையான கடல்சார் பயிற்சிகளை வழங்குவதற்கு பொறுப்பான இப்படைப்பிரிவு, அதன் மூத்த அதிகாரியும் ‘ஐ.என்.எஸ் திர்’ கப்பலின் கட்டளை அதிகாரியுமான கேப்டன் டிஜோ கே ஜோசப் (Captain Tijo K Joseph) அவர்களின் தலைமையில் செயற்படுகிறது.
திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்வி நிலையத்தின் (NMA) இலங்கை கடற்படை அதிகாரி பயிற்சி பெறுநர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக, இதே படைப்பிரிவைச் சேர்ந்த ‘ஐ.என்.எஸ் தரங்கிணி’ கப்பல் கடந்த 2026 மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கைசெய்திகள்
இப்பயணத்தின் போது, இலங்கை கடற்படையின் பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரோஹன் ஜோசப் இக்கப்பல்களுக்குச் சென்று பார்வையிடுவதுடன், கட்டளை அதிகாரிகள், பயிற்சி அதிகாரிகள் மற்றும் பயிற்சி பெறுநர்களுடன் கலந்துரையாடுவார்.
இந்த நெடுந்தூரப் பயிற்சிப் பயணத்தில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஐந்து பயிற்சி பெறுநர்களும் இணைந்துள்ளனர்.
மேலும், பயிற்சிப் படைப்பிரிவின் மூத்த அதிகாரியும் கட்டளை அதிகாரிகளும் இந்திய உயர் ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படைப் பகுதி தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வா ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசவுள்ளனர்.
இப்பயணத்தின் ஒரு அங்கமாக, இரு நாட்டு அதிகாரி பயிற்சி பெறுநர்களுக்கும் இடையே தொழில்முறை, பயிற்சி மற்றும் விளையாட்டுத் தொடர்பான பல்வேறு கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.
இந்தியப் பயிற்சி பெறுநர்கள் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்வி நிலையத்திற்கும், இலங்கை கடற்படைப் பயிற்சி பெறுநர்கள் இந்தியப் பயிற்சிக் கப்பல்களுக்கும் பரஸ்பரம் வருகை தரவுள்ளதுடன், இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளின் கூட்டு இசை நிகழ்ச்சி 2026 அக்டோபர் 27 அன்று காலி முகத்திடலில் (Galle Face Green) நடைபெறவுள்ளது.
இந்தியக் கடற்படை மற்றும் கடலோர காவல்படைக் கப்பல்களின் இந்த வருகையானது, இந்தியாவின் ‘அண்டை நாடுகள் முதன்மை’ (Neighbourhood First) கொள்கை மற்றும் ‘பிராந்தியங்களில் பாதுகாப்பிற்கான பரஸ்பர மற்றும் முழுமையான வளர்ச்சி’ (MAHASAGAR) என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இரு நட்பு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையிலான வலுவான உறவை மேலும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


















