கிண்ணியா பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணி மற்றும் கட்டுமானங்கள் வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு ஒப்படைத்தலுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் கின்னியா பிரதேச செயலகப் பிரிவில் உப்பாறு கிராம உத்தியோகத்தர் பிரிவில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 12 ஏக்கர் காணியில் கின்னியா பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவகத்தை நிர்மாணிப்பதற்கு 2017.06.20 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக்; கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானங்களுக்கு 25.45 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது. பின்னர் மேலெழுந்துள்ள நிலைமைகளால் அப்பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான நிறுவகம் திட்டமிட்டவாறு அக்காணியிலேயே மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லையென்பதை தொழிநுட்பவியல் பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.
அதனால், கிண்ணியா பல்கலைக்கழகத்தின் தொடர் நிர்மாணப் பணிகளை நிறுத்துவதற்கும், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளவாறு, பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணி மற்றும் அதன் கட்டுமானங்களை சுற்றுலாத்துறைக் கருத்திட்டமாக அமுல்படுத்துவதற்கு வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு ஒப்படைப்பதற்கும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
















