-சு.பாஸ்கரன்-
கிளிநொச்சி குளம் வேகமாக மாசடைந்துவரும் நிலையில் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவது பெரும் சவாலாக மாறியுள்ளது. குளத்திலிருந்து நகர் பகுதிக்கு குழாய் வழியாக விநியோகம் செய்யப்படும் குடிநீர் மண் நிறுத்தில் இருப்பதாக மக்கள் கூறியுள்ளனர்.
மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் சுமார் 24 வீதமானவர்கள் இப்போதும் குழாய் வழியான குடிநீர் விநியோத்தை பெறுக்கின்றனர். கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேசங்களில் 12 ஆயிரம் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டு அவற்றின் ஊடாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊடாக நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக கிளிநொச்சி குளத்திலிருந்து நீர் பெறப்பட்டு, சுத்தீகரிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் நிலையில், கிளிநொச்சி குளமானது தற்போது வேகமாக மாசடைந்து வருகின்றது.
குளத்தின் நீரேந்து பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளதுடன், சுமார் 196க்கும் மேற்பட்ட மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் கிளிநொச்சி குளத்தில் சேரும் இரத்தினபுரம் ஆற்றின் இருமருங்கிலும் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
அதேசமயத்தில் கிளிநொச்சி நகரின் கழிவகற்றல் பொறிமுறை இன்மையால் பொதுமக்கள், வர்த்தகர்கள் கழிவுகளை குளத்தின் அலைகரைப் பகுதியில் கொட்டி வருகின்றனர். இரத்தினபுரம் கனகாம்பிகைக் குளம் வரையான ஆற்றுப்பகுதிகளிலும் பகுதிகளிலும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
நகரத்திலிருந்து வெளியேறும் அனைத்துக் கழிவுநீரும்களும் கிளிநொச்சி குளத்தையே சென்றடைகின்றன இதனால் குளத்தின் நீர் மிகவும் வேகமாக மாசடைந்து மனித பாவனைக்கு உதவாத நீராக மாறி உள்ளதாக கடந்த காலங்களில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மற்றும் மாவட்ட அவிருத்தி கூட்டங்களின் கலந்துரையாடப்பட்டது. ஆனாலும் இன்றளவும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. எனவே இது குறித்து அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவேண்டும் என மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.


















