கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி பூநகரி வேரவில் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலை தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டார்.
குறித்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் குமார ஜெயக்கொடி, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் கடற்றொழில் அமைச்சரின் செயலாளர் மருங்கன் மோகன், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவிக்கையில், பூநகரி வேரவில் முனைப் பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் காற்றாலை அமைக்கப்படுவதன் மூலம் அரசாங்கத்துக்கு வருமானத்தை பெறக்கூடிய வகையிலும் அப்பிரதேசத்தில் உள்ள வீதிகளும் புனரமைக்கப்படும்.
காற்றாலையின் மூலம் பாதிப்புகள் ஏற்படுமாயின் அவர்களுக்கான நஷ்ட ஈடு வழங்குவது அல்லது அவர்களுக்கு மாற்று இடங்களை வழங்குவது குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது என்றார்.


















