-அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு-
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டமூலத்தை அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.
மீரிகம பொலிஸ் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
அரசியல் ஆதரவுடனேயே பாதாள உலகச் செயற்பாடுகளும் போதைப்பொருள் கடத்தலும் விரிவடைந்தன. இதற்குத் தனிப்பட்ட உதாரணங்கள் தேவையில்லை, அரசியல்வாதிகளே இதனை வளர்த்தெடுத்தனர். ஆட்சியதிகாரத்தைத் தக்கவைக்கப் பாதாள உலகத்தையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளையும் அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.
சில அரசியல் கட்சிகளின் கூட்டங்களை ஒழுங்கமைக்கும் பணிகளுக்குப் பாதாள உலகத்தினர் பயன்படுத்தப்பட்டமை தற்போது அம்பலமாகியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்களும் பாதாள உலகக் குழுவினரும் ஒரே தரப்பினரே. போதைப்பொருள் கடத்தலின் போது அவர்களுக்குள் ஏற்படும் பிணக்குகள் மற்றும் மோதல்களே.
இந்தக் கொலைகளுக்குக் காரணமாகின்றன. நாங்கள் இந்தக் கொலைகளை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோம். வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குழுவினரை சிவப்பு அறிவித்தல் மூலம் நாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டமூலம் ஒன்றை அடுத்த வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பித்து, அதற்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்க்கிறோம் என்றார்.


















