2019 ஆம் ஆண்டு 700 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டுப் பயணத்தடை விதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், பிரதி காவல்துறை மா அதிபர் விக்ரமாரச்சிகே திலகரத்ன பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில், சுமார் 704 காவல்துறை அதிகாரிகளுக்கு எவ்வித சட்டபூர்வமான காரணங்களுமின்றி வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து, அவர்களுக்கு இடையூறு விளைவித்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்தநிலையில், காவல்துறை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டார். இந்தத் தடையால் பல காவல்துறை அதிகாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2025ஆம் ஆண்டு பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் 11 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தடை உத்தரவு எவ்வித நீதிமன்ற அனுமதியுமின்றிப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதவான் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் கணினிக் கட்டமைப்பில் தன்னிச்சையாக உள்ளீர்க்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், இது காவல்துறை மா அதிபரின் வாய்மொழி உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும், காவல்துறை மா அதிபரின் அனுமதியின்றி எவரும் வெளிநாடு செல்லக்கூடாது என்ற கடிதம் மட்டுமே அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இக்கடிதம் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்திற்கு முறைப்படி அனுப்பப்படவில்லை என்றும் அவர்கள் வாதிட்டனர். இதனையடுத்து, அனைத்துத் தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டார்.


















