நேபாளத்திலிருந்து அழைத்துவரப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஊடாக பல விடயங்கள் தெரியவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை இடம்பெற்ற பின்னர் இஷாரா செவ்வந்தி தலைமறைவாகியிருந்ததாகக் கூறப்படும் மித்தெனிய பகுதியிலுள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வீட்டிற்கு இஷாரா அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், தங்காலை பகுதியிலும் இஷாரா தங்கியிருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர் இஷாரா செவ்வந்தி வாடகை வாகனம் ஒன்றினூடாக கிளிநொச்சிக்கு சென்று அங்கு சில நாட்கள் தங்கியுள்ளார்.
அதன் பின்னர் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாக இஷாரா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் மூன்று வாரங்கள் தங்கியிருந்த நிலையில், அங்கிருந்து நேபாளத்திற்கு தப்பிச் சென்றதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்தியாவில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தபோது, ஜே.கே. பாய் அவருக்கு தமிழினி என்ற பெயரில் ஒரு இந்திய அடையாள அட்டையை தயாரித்துக் கொடுத்துள்ளார். அதன் பின்னரே நேபாளம் சென்றதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பல மாதகால தேடுதலின் பின்னர் இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 6 சந்தேக நபர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு, நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

















