கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இணக்கப்பாடு எட்டப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையிலும், இதுவரையில் குழு நியமிக்கப்படவில்லை.
ஆகவே கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஒரு தீர்மானம் எடுங்கள் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு, மேலும் தெரிவிக்கையில்:
சுங்கத்தில் இருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை நியமிக்குமாறு கடந்த மாதம் 7 ஆம் திகதி எதிர்க்கட்சியின் உறுப்பினர் உங்களிடம் எழுத்து மூலமாக வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 10 ஆம் திகதியன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, கடந்த 17 ஆம் திகதியன்று பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் திகதி குறிப்பிடப்படாமல் இந்த பிரேரணை உள்ளடக்கப்பட்டிருந்தது.
சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இணக்கப்பாடு எட்டப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. எனினும்;,இதுவரையில் குழு நியமிக்கப்படவில்லை. ஆகவே கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஒரு தீர்மானம் எடுங்கள் என்றார்.
இதற்கு பதிலளித்த சபைக்குத் தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, இந்த விடயம் குறித்து இவ்வாரம் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை எடுக்கலாம் என குறிப்பிட்டார்.

















